Saturday, April 19, 2014

நோன்பாளி! (சிறுகதை)

வெகுதூரம் நடந்து வந்த அயர்ச்சி அந்த நாற்பது வயது முதிர் இளைஞனிடம் தெரிந்தது. நெற்றி வியர்வையை வலது உள்ளங்கையால் அழுந்தத் துடைத்து கொண்டான். இடது கை ஒரு அழுக்கு மஞ்சபையை இறுக்கமாக பிடித்திருந்தது.
பள்ளிவாசல் எளிமையாய் நிமிர்ந்திருந்தது. பள்ளிவாசல் பக்கவாட்டில் கூரைக் கொட்டகையாய் 'மதர்ஸா' பள்ளிக்கூடம். தயக்கத்துடன் பள்ளிவாசலுக்குள் கால் வைத்தான் அவன். ரப்பர் மிதியடியை கழற்றி ஓரம் தள்ளினான்.
தொழுகுமிடத்தில் யாருமில்லை. கொல்லைப் புறத்தில் முதியவர் ஒருவர் செங்கல் கலவையிலிருந்து சிறுநீர் ஒற்றும் கட்டிகள் செய்து கொண்டிருந்தார்.
'அஸ்ஸலாமு அலைக்கும் பாய்!' என்றான் வந்தவன்.
''வஅலைக்கும் சலாம்!'' நிமிர்ந்தார்.
''நீங்க பள்ளி வாசல் மோதினார் தானே?''
''ஆமாம்!''
''அஜரத்?''
''மாடியறைல ஓய்வெடுத்துகிட்டு இருப்பார். நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே?''
''மோதினார் பாய்! என் பெயர் ஜெய்லானி. என் சொந்த ஊர் மதுரைக்கு அருகிலிருக்கும் திருப்பத்தூர். வாப்பா, உம்மா இல்லை; சொந்த, பந்தம் கண்டுக்கல. கடந்த 20 வருஷமா மிஸ்கின் வாழ்க்கை தான். ரம்ஜான் மாசம் நெருங்கிருச்சு. நான் கடுமையான நோம்பாளி.
''ரம்ஜான் மாசத்துல எந்த ஊர்ல இருக்கேனோ, அந்த ஊர் பள்ளி வாசலிலேயே டேரா போட்டு முப்பது நோம்பும் வச்சிருவேன். இந்த வருஷம் முப்பது நோம்பையும் உங்க மஹல்லால்ல தான் நோக்கப் போறேன். அது சம்பந்தமாக முத்தவல்லியை பாக்கணும் மோதினார் பாய்!''
தன் தாடியை கோதிவிட்டுக் கொண்டார் மோதினார்...
''உங்க மேல அல்லாஹ் கருணை காட்டியிருக்கான் ஜெய்லானி பாய். முத்தவல்லி ஊர்லதான் இருக்கார். முத்தவல்லிக்கு தகவல் சொல்லி விடுகிறேன். காத்திருங்கள்!''
மஞ்சள் பையை ஓரமாக வைத்து விட்டு 'ஓது' செய்தான் 'நபில்' தொழுகை. இரண்டு ரக்காயத்து முடித்து விட்டு 'துவா' கேட்க ஆரம்பித்தான் ஜெய்லானி.
வந்து சேர்ந்தார் முத்தவல்லி.
''அஸ்ஸலாமு அலைக்கும் முத்தவல்லி பாய்!''
''வஅலைக்கும் ஸலாம் பாய். உங்களை பத்தி மோதினார் சொன்னார். நீங்க நம்ம மஹல்லால்லயே தங்கி முப்பது நோம்பும் நோக்கறதை பத்தி எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனா, இங்க இருக்கிற நானூறு முஸ்லிம் குடும்பங்களும் ஏழ்மையானவை. 'சஹர்' சாப்பாடு சிறப்பாக இருக்காது. கைக்காசுக்கு ஏத்தபடி தான் நோம்புக் கஞ்சியே காய்ச்சுவோம்!''
''மிஸ்கினுக்கு என்ன பாய் பெருசா எதிர்பார்ப்பு? சஹருக்கு ரசம் சோறுன்னாலும் மகிழ்ச்சி தான். நோம்பு திறக்க ஒரு கொட்ரா நோம்புக் கஞ்சி, ரெண்டு மசால் வடை போதும் பாய்!''
திடீரென்று முத்தவல்லியின் முகத்தில் சந்தேகம் கிளைத்தது...
''பாய்! நீங்க ஒண்ணும் தீவிரவாதி இல்லையே?''
மஞ்சள் பையைத் திட்டில் கவிழ்த்தான் ஜெய்லானி. பழைய லைப்பாய் சோப் அரைக்கட்டி. இரு ஜிப்பாக்கள், இரு லுங்கிகள், இரு ஜோடி உள்ளாடைகள், தஸ்பமணிமாலை, யாஸின் புத்தகம்.
''என்னைப் பார்த்தா தீவிரவாதி மாதிரியா தெரியுது?''
''தப்பா நினைச்சிக்காதீங்க பாய். முந்தியெல்லாம் கொமரு காரியம், பள்ளிவாசல் கட்றதுக்கு உதவின்னு ஆளுக வருவாங்க. முடிஞ்ச பணத்தை வசூல் பண்ணி தருவோம். ரெண்டு, மூணு வருஷமா நிலைமை தலைகீழ். நம்ம காசை வாங்கிட்டு போய் யாரும் அதை தீவிரவாதக் காரியத்துக்கு பயன்படுத்தி மொத்த சமுதாயத்தோட பேரையும் கெடுத்திரக்கூடாதுல? அதனால், செய்யற சிறு உதவியையும் ஆராய்ஞ்சு தகுதியான ஆளுக்கு செய்றோம்!''
ஆமோதித்து தலையாட்டினான் ஜெய்லானி.
''ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நாளுக்கான 'சஹர்' சாப்பாட்டை உங்களுக்கு வழங்கும். நோம்பு திறக்கறது நோம்பாளிகளோடயே நீங்கத் திறக்கலாம். இருபத்தியேழாம் கிழமை 'சஹர்' சாப்பாட்டை நம்ம பள்ளி வாசலே தயாரித்து அளிக்கும்!''
''முத்தவல்லி பாய்! முப்பது நாளும் நோம்புக் கஞ்சி தயாரிக்கும் பணிக்கு என்னால் முடிஞ்ச உதவியைச் செய்கிறேன். பூண்டு உரிக்கிறது, தேங்காய் திருகி, அரைக்கிறது, வெங்காயம் உரிக்கறது இந்த மாதிரி வேலைகள் செய்கிறேன். கொல்லைல இருக்கிற தென்னை மரங்கள் ஏறி தேங்காய் பறிச்சு போடுறேன், கல் அடுப்பு ரெடி பண்றேன், முப்பது
நாளும் பள்ளிவாசலுக்கு நான் ஏதாவது செஞ்சுக்கிட்டு தான் இருப்பேன்!
''முறுவலித்தார் முத்தவல்லி...
''அப்படியே செய்ங்க பாய்!''

அன்றைய 'மஹரிப்' தொழுகைக்கான பாங்கை ஜெய்லானியே ஓதினான்.
மறுநாள் காலை தலையில் ஒரு அழுக்குத் துணியைக் கட்டிக் கொண்டு பள்ளிவாசல் முழுமையையும் ஒட்டடை அடித்தான் ஜெய்லானி. ஹவுதுக்குள் இறங்கி கசடுகளை நீக்கி, இரு விரால் மீன்கள் விட்டான்; தென்னை மரம் ஏறி இளநீர்களை உலுப்பினான். உலுப்பின காய்களை ஜெய்லானியும், மோதினார் பாயும் உரித்தனர். மாலை நெருங்கியது... ஆங்காங்கே சிறுவர்களும், சிறுமியரும், பெரியவர்களும் வானத்தில் பிறை தேடினர்.
மேகமூட்டமாய் இருந்ததால் பிறை தெரியவில்லை.
ஓடிவந்தார் முத்தவல்லி...
''போன் வந்திருச்சு, பிறை பாத்துட்டாங்க... போன் வந்திருச்சு, பிறை பாத்துட்டாங்க!''
அவ்வளவுதான்... பள்ளிவாசல் 'நகரா' நோக்கி ஓடினான் ஜெய்லானி. நகரா அருகே மைக்கை ஸ்டாண்டிட்டான். நகராவை டமடமவென அடித்தபடி ''பிறை பொறந்திருச்சு!'' என்று கூவினான். முதல் நோன்புக்கான 'சஹர்' சாப்பாடு ஒரு கூலித் தொழிலாளி வீட்டில்... ரசம் சோறு, உப்புக் கண்டம் பொரித்த அப்பளம், வாழைப்பழம். நோம்பு
நோற்பதற்கான நிய்யத்தைக் கூறினான் ஜெய்லானி. பள்ளிவாசல் போய் படுத்துக் கொண்டான். பகலில் நோன்புக் கஞ்சிக்காக வெங்காயம், வெள்ளைப்பூண்டு உரிக்கும் வேலைகளில் ஈடுபட்டான். முப்பது நாட்களுக்கு, முப்பது வீடுகளில் 'சஹர்' சாப்பாடு எடுத்துக் கொண்டான் ஜெய்லானி.
கிராம மக்கள் பணம் வசூல் பண்ணி எடுத்துக் கொடுத்த ஆடையை அணிந்து ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டான்.
அன்று மாலையே கண்கள் கலங்கியபடி முத்தவல்லியிடமும், மஹல்லா மக்களிடமும் விடை பெற்றான் ஜெய்லானி.
ஜெய்லானியிடம் இருநுõறு ரூபாய் நீட்டினார் முத்தவல்லி...
''மறுக்காம வாங்கிக்கங்க பாய்; பஸ் செலவுக்கு உதவும்!''
நீண்ட தூரம் கையசைத்தபடியே கூடியிருந்த மக்களிடமிருந்து விலகி நடந்தான் ஜெய்லானி.
செம்மண் சாலையில் எட்டு கி.மீ., நடந்தான் ஜெய்லானி. செம்மண் சாலை முடிவில் ஒரு விலையுயர்ந்த கார்
நின்றிருந்தது. காரின் பின் பக்கத்தில் சாய்ந்து நின்றிருந்த ஓட்டுநர் ஜெய்லானியைக் கண்டதும் வணங்கியபடி ஓடோடி வந்தான். துணிப்பையை வாங்கிக் கொள்ள கை நீட்டினான். மறுதலிப்பாய் தலையாட்டியபடி காரின் பின் இருக்கையில் போய் அமர்ந்தான் ஜெய்லானி.
கார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் பறந்தது. குளித்து சிறிய ஓய்வுக்கு பின் புத்தாடைக்கு மாறினான். அடுத்த சில மணிநேரத்தில் விமான நிலையத்துக்கு விரைந்தான் ஜெய்லானி. விமானம் ஜெய்லானியை சுமந்து ஹாங்காங் பறந்தது.
ஹாங்காங் — அலங்காரத் தோட்டம் கூடிய பங்களா. தஸ்பமணி உருட்டியபடி அமர்ந்திருந்த 66 வயது பெண்மணி நிமிர்ந்தார்.
''அஸ்ஸலாமு அலைக்கும்!''
''வஅலைக்கும் சலாம்!''
''பயணம் எப்படியிருந்தது மகனே?''
''பயணத்தின் சிறப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை உம்மா. பயணத்தின் பல நோக்கங்கள் நிறைவேறின. நான் பிறந்த இந்திய மண்ணில் ரமலான் நோன்பை நோற்க விரும்பினேன். விரும்பிய படியே நோற்றும் விட்டேன்.
''ஒரு ஏழை முஸ்லிமாக இருந்து ஏழை, எளியோரின் தின உணவையே 'சஹர்' சாப்பாடாக உண்டு, நோன்பு சார்ந்த அனைத்துக் காரியங்களுக்கும் உடல் உழைப்பு ஈந்து, ஒரே மாதத்தில் அந்த மஹல்லா மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டேன் உம்மா.
''என் உடலை பாருங்கள் உம்மா. எடை குறைந்து மினுமினுக்கிறது. என் மனதிலிருந்த அழுக்குகளும், செல்வச் செருக்கும் கரைந்தோடி விட்டன. என் மீதி வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு ரமலான் மாதத்தையும் ஒரு இந்திய குக்கிராம பள்ளிவாசலின் ஏழை நோன்பாளியாக கழிப்பேன் உம்மா!''
''இன்ஷா அல்லாஹ் மகனே. அந்த பள்ளி வாசலில் உனக்கு எவ்வளவு 'ஜக்காத்து' கொடுத்தனர்?''
''இருநுõறு ரூபாய் உம்மா!''
''பதிலுக்கு அவர்களுக்கு நீ என்ன செய்யப் போகிறாய்?''
''அந்த பள்ளிவாசல் சீரமைப்புக்கும், அக்கிராம மக்கள் நலனுக்கும் ஐந்து லட்சம் இந்திய ரூபாய்க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்பப் போகிறேன்!''
''உன்னை மகனாய் பெற்றதுக்கு பெருமைப்படுகிறேன் ஜெய்லானி!''
''அல்லாஹ் உங்கள் வழியாகவே எனக்கு நற்சிந்தனை வழங்கியுள்ளான் உம்மா; எல்லாப் புகழும் இறைவனுக்கே!''
தஸ்பமணி மாலை உருட்டியபடி உம்மாவும் புன்முறுவலாய் ஆமோதித்தார்.
நன்றி: தினமலர்