Friday, April 10, 2015

புனித குர் ஆனில் இருந்து 33 அறிவுரைகள்!


1. பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

2. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்;உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். 2:42

3. உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள். 2:188

4. நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை நேசிக்கின்றான். 2:196

5. எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும்
நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான். 2:215

6. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். 2:216

7. கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும். 2:263

8. மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள். 2:264

9. தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது. 2:271

10. வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். 6:151

11. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள். 6:152

12. ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. 6:164

13. அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! 16:51

14. உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. 7:31

15. தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். 4;36

16. யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். 3;180

17. “உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும். 31:19

18. நீங்கள் விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்;அது மானக்கேடானதாகும். 17:32

19. நீங்கள் (தானியங்களை) அளந்தால் அளவைப்பூர்த்தியாக அளங்கள்: இன்னும்,சரியான தராசைக்கொண்டு நிறுத்துக்கொடுங்கள். 17:35

20. பிறர் குறைகளைத் துருவித்துருவி ஆராயாதீர்கள். 49:12

21. சந்தேகமான பல எண்ணங்களில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்.ஏனெனில்,எண்ணங்களில் சில பாவமாகும். 49:12

22. குழப்பம் செய்வது கொலையை விடக்கொடியது. 2:217

23. தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக்கொண்டு வந்தால் அதைத்தீர்க்க விசாரித்துக்கொள்ளுங்கள். இல்லையெனில்,அறியாமையினால் குற்றமற்ற ஒரு கூட்டத்துக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம். 49:6

24. பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால் அவர்களை நோக்கி "ச்சீ" என்றும் சொல்ல வேண்டாம்.அவ்விருவரையும் விரட்ட வேண்டாம்அவ்விருவரிடம் கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும்,இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! 17:23,24

25. பெற்றோர்களோ நெருங்கிய உறவினர்களோ,விட்டுச்சென்ற சொத்துகளில் ஆண்களுக்கும் பங்கு உண்டு;பெண்களுக்கும் பங்கு உண்டு. 4:7

26. எவர் ஒரு மனிதரைக்கொலை செய்கிறாரோ அவர் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர் போலாவார்.எவர் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைத்தவர் போலாவார். 5:32

27. நீர் அநாதையைக்கடிந்து கொள்ளாதீர் யாசிப்பவரை விரட்டாதீர். 93:9,10

28. குறை சொல்லிப்புறம் பேசித்திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். 104:1

29. உங்களில் ஒரு சமூகத்தார் மற்றொருவரைக்கேலி செய்ய வேண்டாம்.ஒருவரையொருவர் பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள். 49:11

30. சபைகளில் நகர்ந்து இடம் கொடுங்கள் என்று உங்களுக்குச்சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான். 58:11

31. எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அதை ஒரு நிரபராதி மீது வீசிவிடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்துகொள்கிறான். 4:112

32. அவர்கள் இந்தக்குர் ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டுவிட்டனவா? 47:24

33. எவருக்கு நல்ல இதயம் இருக்கிறதோ,அல்லது எவர் ஓர்மையுடன் செவி தாழ்த்திக்கேட்கிறாரோ,அவருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தல் (படிப்பினை) இருக்கிறது. 50:37


நன்றி
புஷ்ரா நல அறக்கட்டளை