Monday, June 22, 2015

இறுதி நபியின்... இறுதி பயணம்...



மாண்பு நபியின் மரண அறிகுறி!

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் சொல், செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன.

1. ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் 20 நாட்கள் நபியவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.

2. இவ்வாண்டு ரமழான் மாதத்தில் இரண்டு முறை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபியவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.

3. நபியவர்கள் கடைசி ஹஜ்ஜின் போது கூறினார்கள். இந்த வருடத்திற்குப்பிறகு இவ்விடத்தில் இனிமேல் உங்களை நான் சந்திக்காமல் இருக்கலாம்.

4. அய்யாமுல் தஷ்ரீகீன் நடுப்பகுதியிலே சூரத்துன் நஸ்ர் இறங்கியது, இதைக்கண்டு அவர்களின் மரணம் நெருங்கியதாக அறிந்துகொண்டார்கள்.

இறுதி நோயின் துவக்கம்

ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ஸபர் மாதம் 29ஆம் தேதி திங்கட்கிழமை நபி (ஸல்) அவர்கள் ஜன்னதுல் பகீயில் ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டுத்திரும்பி வரும்போது நபியவர்களுக்கு தலைவலியும், பெரும் காய்ச்சலும் ஏற்பட்டது. அதனால் அவர்களின் தலையில் அணிந்திருந்த தலைப்பாகைக்கு மேல் அதன் சூடு தென்பட்டது. நபியவர்கள் நோயாளியாக இருந்து கொண்டே பதினொரு நாட்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள். நபியவர்கள் நோயாளியாக இருந்த நாட்கள் 13 அல்லது 14 நாட்கள்.

கண்ணிய நபியின் கடைசி வாரம்

நபியவர்களின் நோய் அதிகரித்துவிட்டது. 'நான் நாளைக்கு எந்த மனைவியிடம் செல்லும் நாள், நான் நாளைக்கு எந்த மனைவியிடம் செல்லும் நாள்' எனக்கேட்க ஆரம்பித்தார்கள். நபியவர்களின் நோக்கத்தைத் தெரிந்து கொண்ட மனைவிமார்கள் நீங்கள் விரும்பிய வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என அனுமதியளித்தார்கள். பழ்ல் இப்னு அப்பாஸ், அலீ இப்னு அபீதாலிப் என்னும் இரு நபித்தோழர்களுக்கு மத்தியில் தலையை (துணியால்) கட்டியவர்களாக இரண்டு கால்களும் (நடக்க முடியாத காரணத்தால்) இழுபட்ட நிலையில் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களின் வீட்டிலேயே அன்னாரின் வாழ்க்கையின் கடைசி வாரத்தை கழித்தார்கள்.

மரணத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன்...!!

நபியவர்கள் பள்ளிக்குள் நுழைந்து மிம்பரில் அமர்ந்து அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து, மனிதர்களே! என் பக்கம் கவனம் செலுத்துங்கள், 'தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை பள்ளி வாசல்களாக (வணங்குமிடமாக) எடுத்துக் கொண்ட யூத, கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் எனக் கூறினார்கள்.

நான்கு நாட்களுக்கு முன்....!!

நபியவர்கள் நோயாளியாக இருந்தும் மக்களுக்கு எல்லாத் தொழுகைகளையும் தொழவைத்தார்கள். இஷா நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத அளவுக்கு நோய் அதிகரித்து விட்டது. மக்கள் தொழுது விட்டார்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இல்லை அல்லாஹ்வின் தூதரே அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என நாங்கள் கூறினோம். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுங்கள் எனக்கூறினார்கள். நாங்கள் தண்ணீரை ஊற்றினோம், நபியவர்கள் குளித்தார்கள். பள்ளிக்கு செல்வதற்கு முயற்சித்தார்கள். ஆனால் மயக்கம் ஏற்பட்டு மயங்கிவிட்டார்கள். மயக்கம் தெளிந்த பின் மக்கள் தொழுது விட்டார்களா? எனக் கேட்டார்கள். ஆரம்பத்தில் நடந்தது போன்றே நடந்தது. மூன்றாவது முறையும் அப்படியே நடந்தது. அபூபக்கர் (ரலி) அவர்களை மக்களுக்கு தொழ வைக்கும்படி நபியவர்கள் செய்தி அனுப்பினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மீதியான நாட்களில் (நபியவர்கள் மரணிக்கும் வரை உள்ள தொழுகைகளை); தொழவைத்தார்கள் (புகாரி, முஸ்லிம்). அதாவது, நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது பதினேழு நேர தொழுகைகளை அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழவைத்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் (புகாரி).

ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்...!!

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை நோய் குறைந்திருந்ததை நபியவர்கள் உணர்ந்து, இரண்டு மனிதர்களின் உதவியோடு அவ்விருவருக்கும் மத்தியில், ளுஹர் தொழுகைக்காக பள்ளிக்கு வெளியானார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் வருவதைக்கண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் பின்னுக்கு வர ஆரம்பித்தார்கள். பின் வராமல் அங்கேயே நிற்கும்படி நபியவர்கள் அவர்களுக்கு சைகை செய்தார்கள். என்னை அவருக்கு அருகாமையில் உட்கார வையுங்கள் என அவ்விருவருக்கம் கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் இடது புறத்தில் நபியவர்களை அவ்விருவரும் உட்கார வைத்தார்கள். நபியவர்களை பின்பற்றி அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுதார்கள். மக்களுக்கு நபியவர்களின் தக்பீரை கேட்கவைப்பதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் (தக்பீரை) கூறினார்கள் (புகாரி).

இறுதி தினத்திலும் இருந்ததெல்லாம் வழங்கிய நபி (ஸல்) அவர்கள்!

மரணமடைவதற்கு ஒரு நாளைக்கு முன் தன்னிடத்திலிருந்த அடிமையை உரிமையிட்டு ஆறு அல்லது ஏழு தங்கக்காசுகளை தர்மம் செய்தார்கள். அவர்களின் ஆயுதத்தை முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள். அந்த இரவு ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய விளக்கை அனுப்பி, ஒரு பெண்ணிடமிருந்து எண்ணெய்யை வாங்கி விளக்கை ஏற்றினார்கள். நபியவர்கள் ஒரு யூதனிடம் தன்னுடைய கவச ஆடையை முப்பது ஸாஉ கோதுமைக்கு அடமானம் வைத்திருந்தார்கள்.

இறுதி தினமும் இரகசியச்செய்தியும்...!!

திங்கட்கிழமை சுபஹு தொழுகையை அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழவைத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையிலிருந்து திரையை விலக்கிக்கொண்டு தொழுது கொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்முறுவலாக சிரித்தார்கள். நபியவர்கள் தொழுவதற்காக வரப்போகிறார்கள் என நினைத்து அபூபக்கர் (ரலி) அவர்கள் பின்னுக்கு வர நினைத்தார்கள். நபியவர்களை பார்த்த சந்தோஷத்தில் மக்கள் தங்களின் தொழுகையில் குழம்பிக் கொள்ளும் அளவுக்கு ஆகிவிட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'நீங்கள் உங்களின் தொழுகையை பரிபூரணப்படுத்துங்கள்' எனக்கூறிவிட்டு நபியவர்கள் அறைக்குள் சென்று திரையை மூடிவிட்டார்கள். அதன் பின் நபியவர்களுக்கு வேறு எந்த தொழுகையும் தொழ வாய்ப்பு கிடைக்கவில்லை.

சூரியன் உதயமாகும் போது நபியவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து அவர்களுக்கு ஒரு செய்தியை இரகசியமாக கூறினார்கள். அதைக்கேட்டதும். பாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, இன்னுமொரு முறை அவர்களை அழைத்து ஒரு செய்தி கூறினார்கள். அதைக்கேட்டதும் சிரித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். அதன்பின் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவ்விரு செய்திகள் பற்றி நாங்கள் கேட்டோம். அந்த நோயினால், நபியவர்கள் மரணிக்கப்போவதாக கூறினார்கள். அதைக்கேட்டு நான் அழுதேன். அவர்களின் குடும்பத்தில் நபியவர்களுக்குப்பின், முதலில் மரணிப்பவர் நான் என கூறினார்கள், அதற்கு நான் சிரித்தேன் எனக் கூறினார்கள்.

அவர்களுக்கு நோய் அதிகரித்துக்கொண்டே சென்றது. கைபரில் யூதப் பெண் கொடுத்த நஞ்சின் விளைவை உணர்ந்தார்கள். ஆயிஷாவே! கைபரில் உண்ட உணவின் (நஞ்சின்) வேதனையை உணருகின்றேன், அந்த நஞ்சின் காரணமாக என் கல் ஈரல் துண்டிக்கப்படும் நேரம் வந்து விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அண்ணலின் சகராத் நேரம்.

நபியவர்களுக்கு சகராத் நேரம் வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர்களை தன்னோடு அணைத்துக் கொண்டார்கள். 'நபியவர்கள் என்னுடைய வீட்டில் இருக்கும்போது என்னுடைய நாளிலே என்னுடைய அணைப்பிலேயே மரணமடைந்தது' அல்லாஹ் எனக்களித்த பெரும் அருளில் ஒன்றாகும். நபியவர்கள் என் மீது சாய்ந்து படுத்திருக்கும் போது என்னுடைய சகோதரர் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் தன்னுடைய கையில் மிஸ்வாக் ஏந்தியவர்களாக வீட்டிற்குள் நுழைந்தார்கள். நபியவர்கள் அந்த மிஸ்வாக்கின் பக்கம் தன் பார்வையை திருப்புவதை நான் பார்த்து நபியவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புவதை தெரிந்து கொண்டு உங்களுக்கு அதைத் தரவா? என கேட்டேன் நபியவர்கள் தன் தலையால் 'ஆம்' என சாடை செய்தார்கள். அதை எடுத்து அவர்களுக்கு கொடுத்தேன். அது அவர்களுக்கு கடினமாக இருந்ததால் அதை மென்மையாக்கித்தரவா? எனக் கேட்டேன். நபியவர்கள் தன் தலையால் 'ஆம்'; என சாடை செய்தார்கள். அவர்களுக்கு மென்மையாக்கிக் கொடுத்தேன். அவர்கள் மிஸ்வாக் செய்தார்கள். நபியவர்களுக்கு பக்கத்தில் ஒரு தண்ணீர் பாத்திரம் இருந்தது. அதில் தனது இரு கரத்தையும் வைத்து தன் முகத்தை தடவிக் கொண்டு

லா இலாஹ இல்லல்;லாஹ் 'நிச்சயமாக மரணத்திற்கு சகராத் வேதனை உண்டு' எனக்கூறினார்கள் (புகாரி).

நெஞ்சை உருக்கும் நிறைவான விடைபெறல்!

மிஸ்வாக் செய்து முடித்ததும், தன் கையை அல்லது விரலை உயர்த்தி விழிகள் விண்ணை நோக்க, இதழ்கள் மெல்ல அசைந்தன. உதடுகள் உதிர்த்ததை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் செவி சாய்த்துக் கேட்டார்கள்.

مَعَ الَّذِيْنَ أَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّـيْـنَ وَالصِّدِّيْقِيْـنَ وَالشُّهَدَاءِ وَالصَّالِـحِيْـنَ

'நீ அருள் புரிந்த நபிமார்களோடும், உண்மை யாளர்களோடும், ஷுஹதாக்களோடும், நல்லடியார்களோடும் (என்னை) சேர்த்து விடுவாயாக'.

இறைவா! 'என் பாவங்களை மன்னிப்பாயாக! என் மீது அருள் புரிவாயாக! உயர்ந்தவனாகிய அல்லாஹ் (வாகிய உன்) அளவில் என்னைச் சேர்த்துக் கொள்வாயாக' இந்த கடைசி வார்த்தையை மும்முறை மொழிந்த போது 'அவர்களின் கரம் சாய்ந்தது'. உயர்ந்தவனாகிய அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு, ரபீஉல் அவ்வல், பிறை 12, திங்கட்கிழமை, சூரிய வெப்பம் அதிகமான நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் இறையடி சேர்ந்தார்கள்.

UKTamilan

No comments: