குடியுரிமைச் சட்டம் கேள்விகளும் பதில்களும்
1.
கேள்வி: பிரதமரும், முதலமைச்சரும் குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு வராது என்று சொன்ன பிறகு போராட்டம் நடத்துவது சரியா?
பதில்: இருவரும் போராடும் மக்களை வெற்று வார்த்தைகளால் ஏமாற்றுகிறார்கள். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நாடு முழுமையும் என்.ஆர்.சி அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அரசின் முடிவைச் சொல்லிவிட்டார். அதில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2.
கேள்வி: முதல்வர், பிரதமர் வார்த்தைகளில் நம்பிக்கையில்லையா?
பதில்: நிச்சயமாக இல்லை. பணமதிப்பிழப்பின் போது 50 நாட்கள் அவகாசம் தாருங்கள். சரி செய்யவில்லையென்றால் என்னை தீ வைத்துக் கொளுத்துங்கள் என்றவர் தானே மோடி. நாடு முழுமையும் மக்கள் சீரழிந்ததைப் பார்த்தோமே.
3.
கேள்வி: என்.பி.ஆர் தானே எடுக்கிறார்கள். என்.ஆர்.சி. இப்போது இல்லையென்று சொல்லிவிட்டார்களே?.
பதில்: சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்பு வேறு. என்.பி.ஆர். என்பது வேறு. என்.பி.ஆர். தான் என்.ஆர்.சிக்கு அடிப்படை. சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் படி இது மேற்கொள்ளப்படவில்லை.
4.
கேள்வி: இதை ஆதரிப்பதால் தவறொன்றுமில்லை என தமிழக அமைச்சர்கள் பேசுகிறார்களே?
பதில்: ஏப்ரல் மாதம் என்.பி.ஆர் எடுப்போம் என்று தமிழக அரசு சொல்லுகிறது. ஆனால் பீஜேபி ஆளும் மாநிலங்களும், பீஜேபி ஆதரவு மாநில முதல்வர்களும் இதை எடுக்க மாட்டோம் என மறுத்துள்ளார்கள். அவர்கள் ஏன் மறுக்கிறார்கள்?
5.
கேள்வி: குடியுரிமையை நிரூபிப்பதில் என்ன தவறு?
பதில்: குடியுரிமையை யாரிடம் நிரூபிக்க வேண்டும்? எதற்காக நிரூபிக்க வேண்டும்.
* காசியில் இருக்கும் லட்சக்கணக்கான அகோரிகளுக்கு கோவணம் கூட இல்லை. அவர்களிடம் ஆவணம் கேட்பார்களா? அவர்களால் நிரூபிக்க முடியுமா?
* 15 கோடி ஆதிவாசி மக்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்?
* நரிக்குறவர்களிடம் என்ன ஆவணம் இருக்கும்? அவர்களால் நிரூபிக்க முடியுமா?
* மாநிலம் விட்டு மாநிலம் வேலைக்காக அலைபவர்கள் பலகோடி. அவர்களால் நிரூபிக்க முடியுமா?
* வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 2 கோடி பேர். அவர்கள் இங்கு வந்து நிரூபித்துவிட்டு செல்ல வேண்டுமா?
* 70 ஆண்டுகால விடுதலைக்குப் பிறகும் 30% பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். அவர்களிடம் என்ன ஆவணம் இருக்கும்?
6.
கேள்வி: இதில் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என முதல்வர் கேட்கிறாரே?
பதில்: இவர் ஒரு விசயத்திற்கு இப்போது பதில் சொல்லட்டும். குடியுரிமைச் சட்டத்தின் படி இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை. இலங்கை கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆருக்கு குடியுரிமை வழங்க இவர்களால் முடியுமா? அவருக்கு குடியுரிமை உண்டா? இல்லையா? ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தாருக்கே இங்கு குடியுரிமை இல்லை.
7.
கேள்வி: இதில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு உண்டா?
பதில்: இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் பாதிப்பு உண்டு.
8.
கேள்வி: சிறுபான்மையினர் வாக்குவங்கிக்காக போராட்டம் தூண்டப்படுகிறது என்கிறார்களே?
பதில்: சிறுபான்மையினர் வாக்கு வங்கி என்றால், அவர்கள் பெரும்பான்மை வாக்கு வங்கியை உறுதிப்படுத்த இதைக் கொண்டு வந்தார்களா?
சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக பேசினால் வாக்குவங்கி.
பெரும்பான்மை என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் சொல்வது தேசியமா?
9.
கேள்வி: சட்ட விரோத குடியேறிகளை கண்டறிய வேண்டாமா?
பதில்: ஊரில் உள்ள ஒரு திருடனை கண்டறிய, ஊரில் உள்ள அனைவரும் நாங்கள் திருடர்கள் இல்லையென்று நிரூபிக்க வேண்டுமா?
10.
கேள்வி: இதற்கு தீர்வுதான் என்ன?
பதில்: கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சட்டம் திரும்பப்பெறப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.
கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் வீண் வேலை நிறுத்தப்பட வேண்டும்.
3000 கோடிக்கு படேலுக்கு சிலை வைத்த குஜராத்தில், அந்த பணத்தை வைத்து குடிசை வீடுகளை மாற்றியிருந்தால், இப்போது சுவர் எழுப்பி அவமானப்பட வேண்டிய அவசியம் வந்திருக்காது.
No comments:
Post a Comment