அம்பேத்கர் மீது காவி சாயத்தை தெளிக்கும் சனாதனம்! - எஸ்.ஜி. ரமேஷ்பாபு
முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் - நூல் அறிமுகம்
(ஆனந்த் தெல்தும்ப்டே, தமிழில்: சிங்கராயர், சீர்மை வெளியீடு)
”இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன்” என சூளுரைத்த மாமேதை அம்பேத்கரை, கடந்த பல ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவர் ஒரு தேசிய தலைவர் என புகழ்ந்துரைக்கத் துவங்கினர். பல புனைவுகளை உருவாக்கி உலவவிட்டனர். ஆதாரங்கள் இல்லாமல் பல கதைகளை எழுதினர். அத்தகைய கதைகளில் ஒன்று தான் “அம்பேத்கர் ஒரு ஆர்எஸ்எஸ் முகாமுக்குச் சென்றதாகவும், தீண்டத்தகாதவர்களுக்கு வழங்கப்பட்ட “சமத்துவ” சிகிச்சையால் ஈர்க்கப்பட்டதாகவும்” அவர்கள் கதை கட்டிவிட்டனர். அவர் புத்த மதத்தைத் தழுவியதைக்கூட அது இந்த மண்ணில் தோன்றிய மதமென்பதால்தான் அவர் அதைத் தேர்ந்தெடுத்தார் என வெட்கமின்றி சொல்லிக் கொண்டு திரிகிறது சனாதனக் கூட்டம்.
”இந்து சமூகத்திலுள்ள தீங்குகளைக் களைந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், சமத்துவ அடிப்படையில் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நீண்ட காலம் நம்பி வந்தேன். இதுவே, மகத் சைதார் குளத்து சத்தியாகிரகமும், நாசிக் ஆலயப் பிரசே சத்தியாகிரகமும் நடைபெற உந்துதலாக இருந்தது. இந்த நோக்கத்துடன்தான் மனுஸ்மிருதியை எரித்தோம். வெகுஜன பூணூல் போராட்டம் நடத்தினோம்.
ஆனால், அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வேறு. இந்துக்களுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம உரிமையுடன் வாழமுடியாது. இது சமுதாயத்தின் அடித்தளமே சமத்துவமின்மைதான் என்று நான் முழுமையாக இன்று நம்புகிறேன். இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் இருக்க இனி விரும்பவில்லை. தொகுதி 37, (பக்கம் 297-1942, ஏப்ரல் 26)
இது ஒரு உதாரனம், அவர் எழுத்துக்களில் சனாதன கொள்கைகளை இந்து மத அடிப்படை வாதத்தின் மீதும், அவர்களது ஏமாற்றுத் தனமான சுரண்டல் மீதும் அவர் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தார்.
அவர் தாக்குதலின் வெம்மை தாங்காமல்தான் போலி விடுதலை போராட்ட வீரர் சாவர்க்கர் அம்பேத்கர் குறித்து கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்.
”இந்து மதத்தின் மீது வசைமாறி பொழிகிறார். அவர் புத்தரை பகுத்தறிவுவாதி என்கிறார், பௌத்தம் அப்பழுக்கில்லாத சிறந்த மதம் என்கிறார். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளை கண்டிக்கும் இவர் இஸ்லாத்தில் உள்ள, கிருத்துவத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் கண்டிக்க வேண்டும். இஸ்லாத்திலும், கிருத்துவத்திலும் அடிமைகள் வைத்திருப்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம், கண்டிக்க அவரது நாக்குக்கோ, பேனாவுக்கோ கண்டிப்பாக துணிச்சல் இராது. காரணம் அச்சம்தான்.” (1956, சாவர்க்கர் தொகுப்புகள்)
ஆனாலும் காவிக்கூட்டம் அவரை தமதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது. அவர் பிறந்த மராட்டியத்தில் சிவ சக்தி, பீம் சக்தி, இந்து சக்தி என அவரை தனது குடைக்குள் அடக்கத் துடிக்கிறது .
சிவசேனா, ஜனசங்கம் 1982 ஏப்ரல் 14-ஆம் தேதி ஹைதராபாத் நகரத்தில் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி – சமூக சமத்துவ நாள் என்ற பெயரில் ஊர்வலம் நடத்தியது. குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து – ரத்த ஆறை ஓடவிட்ட அதே கூட்டம்தான் வெட்கம் இல்லாமல் அம்பேத்கார் பிறந்த நாள் ஊர்வலம் எடுத்து தாழ்த்தப் பட்டோர்களுக்கு வலைவீச்சு நடத்தியது.
தமிழகத்திலும் பல முயற்சிகள் நடக்கிறது அதில் நகைப்புக்குறிய ஒரு முயற்சி திருவண்ணாமலையில் நடந்தது. திடீரென பல இடங்களில் கீழ்கண்ட தலைப்பில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.
அருள்மிகு. சுவாமி அம்பேத்கர் திருக்கோயில் கட்டுவதன் நோக்கம்: பல ஆயிரம் ஆண்டுகளாய் சேரிச் சிறைகளில் தள்ளி அடக்கப்பட்டு தீண்டாமைக் கொடுமையால் உயர் சாதியினரால் அநாயசமாகக் கொலை செய்யப்பட்டும். சாணிப்பால் – சவுக்கடி வாங்கியும், துன்புறுத்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் துன்பம் பல திணிக்கப்பட்டு அரை வயிறும் கால் வயிறு உணவும்கூட கிடைக்காமல் ஏழ்மையில் தள்ளப்பட்டு: பன்றிக் குடிசை போன்ற வீடுகளில் வசிக்கப்பட்டு, கந்தைத் துணி உடுத்தப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமையைத் தலைகீழாக மாற்றி, அம்மக்களை எம்.எல்.ஏ. எம்.பி. ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ்.. டாக்டர் என்ஜினியர், வக்கீல் என உயர்த்தியவன் கடவுள் அம்பேத்கர். – இங்கணம் : அருள்மிகு. சுவாமி அம்பேத்கர் பக்தி இயக்கம்.
மேற்கண்ட பிரசுரம் நீண்டது எனினும் ஒரு பாரா மட்டுமே மேலே உள்ளது. காலகாலமாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்தக் கொடுமையை செய்த மனுதர்மம் குறித்தோ அல்லது அதன் அடிப்படையில் அமைந்த சனாதனம் குறித்தோ ஒரு வார்த்தையும் இல்லாமல் இந்த பிரசுரம் வந்த பின்னணி என்னவென சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?
இது ஒரு பக்கம் எனில் அம்பேத்கரின் மற்றொரு முகம் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒரு கதையாடலையும் அம்பேத்கர் மீது பழியாய் சுமத்திச் செல்கின்றனர். இந்தக் கதையாடலை எதிர்கொள்ள மிக முக்கிய தரவுகளுடன் வந்துள்ள ஆவணம்தான் “ முஸ்லிம்கள் குறித்த அம்பேத்கர் – கட்டுக்கதைகளும், உண்மைகளும்” என்ற ஆனந்த்டெல்டும்டேவின் புத்தகம்.
30 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், சர்வதேச சஞ்சிகைகளில் பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ள இந்தியாவின் மிகசிறந்த அறிவு ஜீவிகளில் ஒருவரான ஆனந்த் டெல்டும்டே மோடியின் அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்டார். எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவர் இரண்டு ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது எழுத்துக்கள் சமகாலத்திம் மிகவும் விவாதிக்கத்தக்கவை. அவரது எழுத்துக்கள் சனாதனத்தின் மீது காழ்ப்பு கொண்டவை. இது ஒன்று போதாதா அவர் பழிவாங்கப்பட!
சனாதனவாதிகளின் கட்டுக்கதைகளை அம்பேத்கர் எழுத்தின் மூலம் ஒவ்வொன்றாக கட்டுடைக்கிறார்.
1. அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தார்.
2. முஸ்லிம்களை ‘பயங்கரவாதிகள்’ என அம்பேத்கர் குறிப்பிட்டார்.
3. அம்பேத்கர் இருதேசக் கோட்பாட்டை நம்பினார்.
4. அம்பேத்கர் பண்பாட்டுத் தேசியவாதத்தை நம்பினார்.
5. பௌத்தத்தை ஒழித்தவர்கள் முஸ்லிம்கள் என அம்பேத்கர் கருதினார்.
6. அம்பேத்கர் எழுதிய “பாகிஸ்தான் அல்லது இந்தியம் பிரிவினை ஒரு முஸ்லிம் எதிர்ப்பு நூல்.
7. முஸ்லிம்கள் எப்போதுமே இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரானவர்கள்.
8. இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து அமைதியாக வாழ முடியாது என அம்பேத்கர் நம்பினார்.
9. சீர்திருத்தத்துக்கு எதிரானவர்கள் என்று முஸ்லிம்களை அம்பேத்கர் வெறுத்தார்.
10. அம்பேத்கர் இந்துக்களின் தரப்பில் இருந்தார்.
11. அம்பேத்கர் ஒரு தேசியவாதி ஆவார்.
இவைகள்தான் இந்த நூலில் கட்டுடடைக்கும் பகுதிகள். சிங்கராயர் மிகவும் தேர்ந்த மொழிநடையில் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். கவனிக்கவும் மொழி பெயர்ப்பு எனச் சொல்லவில்லை, மொழியாக்கம் எனக் குறிப்பிடுகிறேன். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்வது மொழி பெயர்ப்பு, உண்மை எழுத்தின் அர்த்தம் கெடாமல் புரியவைப்பது மொழியாக்கம்.
அரை உண்மைகள். ”முழுப் பொய்களை விடவும் ஆபத்தானவை, கருத்தியல் தளத்தில் இன்று இந்து மதவெறி அரசியல் பெற்றிருக்கும் செல்வாக்கிற்குக் காரணமானவை, இத்தகைய பல அரை உண்மைகள்தாம். பிழைப்புவாத அறிவுத்துறையினர் புகலிடம் தேடுவதும் இத்தகைய அரை உண்மைகளில்தான்.
இந்த நஞ்சு பரவத் தொடங்கும் முன்னரே இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென உணர்ந்து, உடனடியாக இந்நூலை எழுதியிருக்கிறார் தோழர் ஆனந்த் டெல்டும்டே” என முன்னுரையில் கூறியுள்ளது மிகவும் பொருத்தமானது.
”பாபாசாகேப் அம்பேத்கரை சங் பரிவாரம் தன் தரப்பில் சேர்த்துக் கொண்டாலும், சாதிகள் ஒழிப்பு என்ற அவரது குறிக்கோளைப் பற்றியோ, சுதந்திரம் சமத்துவம் – சகோதரத்துவக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தியாவை உருவாக்கும் அவரது தரிசனத்தைப் பற்றியோ பேசுவதை கவனமாகத் தவிர்க்கிறது. எந்தச் சிக்கலின் தீர்வுக்காக தன் முழு வாழ்க்கையையும் அம்பேத்கர் பணயமாக வைத்தாரோ, அதனை தன் வசதிக்கேற்ப திரித்துக் கூறுவதே சங்கப் பரிவாரப் பிரச்சாரத்தின் மொத்தப் போக்காகவும் உள்ளது.” (பக் 25) என டெல்டும்டே சுட்டுவது மிகச்சிறந்த உதாரணமாகும்.
தமிழில் அம்பேத்கர் நூல் தொகுப்பில் தொகுதி 15 ”பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை” என்ற நூலாகும். 701 பக்கங்களை கொண்ட இந்த நூல் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூலாகும். மிகுந்த மேதமையுடன், பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாக முஸ்லீம்கள் முன்வைக்கும் வாதம் என்னவென்றும், முஸ்லிம் லீக் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றும் ஆராய்கிறார். தாயகம் கோரும் ஒரு தேசத்தின் அடிப்படை வாதங்கள், இன்னொரு பக்கம் மிகப்பெரிய ஜனத்திரளான ஒடுக்கப்பட்டோரின் இழிந்த நிலையிலிருந்து விடுபடுதல் கோரிக்கையோடு ஒப்பிட்டு விவாதிக்கிறார்.
மற்றொரு பக்கம் பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிராக இந்துக்களின் வாதங்கள் என்னனென்ன அவர்கள் முன்வைக்கும் ஒருமைப்பாட்டுச் சிதறல், பாதுகாப்பு வலிமை குன்றல் போன்றவற்றின் உண்மை நிலை. பாகிஸ்தானும் வகுப்பு நல்லிணக்கமும், பாகிஸ்தான் இல்லை என்றால் என்னவாகும் என்றும் பாகிஸ்தானுக்கு இந்து தேசம் மாற்று ஏற்பாடா என ஆராய்வதுடன் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளை ஒப்பிட்டு எழுதியுள்ள சிறந்த ஆவணம் அந்தப் புத்தகம்.
ஆனால் அம்பேத்கரின் இந்த நூல்தான் சனாதன சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக அவரை நிறுத்தப் பயன்படுத்தும் நூலாகும். அதாவது அவர் எழுதியதை வெட்டி, சுருக்கி தங்கள் வசதிக்கு ஏற்ப அர்த்தங்களை உருவாக்கி மொத்தத்தில் அவரின் எழுத்துக்களில் உள்ள உண்மைகளில் அரை உண்மைகளை மட்டும் எடுத்து சித்து விளையாட்டைச் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். உண்மையில் இந்தப் புத்தகம் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையில் இந்து மற்றும் இஸ்லாமியர் தரப்பு வாதங்களை முழுமையாக உள்வாங்கி ஒரு முழு ஒப்பீட்டைச் செய்து எழுதப்பட்டதாகும். ஆனால் சனாதான சக்திகள் இதில் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் குறித்து அவர் எழுதியதை மட்டும் பிரசுரம் செய்து அவர் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் எனக் கட்டமைக்க விரும்புகின்றன.
உதாரணத்திற்கு மத ஆணாதிக்கம் திணித்த தீய வழக்கம் எல்லா மதங்களிலும் உள்ளது. ஒரு நேர்மையான ஆராய்ச்சியாளர் என்ற முறையில் முஸ்லிம் பெண்களுக்கு அம்மதம் வித்தித்துள்ள கட்டுபாடுகளையும் விரிவாகத் தனது நூலில் எழுதி இருக்கிறார்.
இந்து மத ஆணாதிக்கம் பெண்களை மிகவும் கேவலமாக நடத்துவதை ஆயிரமாயிரம் பக்கங்களில் அவர் எழுதியதை மறைத்து இஸ்லாமிய பெண்களின் அவல நிலையை, அவர்கள் மீது கொண்ட நேயத்துடன் எழுதும்போது அவரது எழுத்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக சித்தரிப்பதுதான் சனாதனத்தின் அயோக்கியத்தனம்.
இப்படி பல கட்டுக்கதைகளை பரவச்செய்யும் சனாதன சக்திகளின் விஷமத்தனத்தை மிகவும் ஆதாரத்துடன் கேள்விக்குள்ளாகுகிறார் ஆனந்த் டெல்டும்டே. சனாதன எதிர்ப்புப் போரில் இத்தகைய தரவுகளையும் விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்ட இந்நூல் மிக முக்கியமான ஆயுதங்களாகக் களச்செயல்பாட்டாளர்களுக்குப் பயன்படும் என்பது நிதர்சனம்.
இறுதியாக ஒன்று 1992-ல் இவர்கள் அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்பதற்கு டாக்டர் அம்பேத்கார் நினைவு நாளான டிசம்பர் 6- ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தற்கான சூட்சுமம் சனதன சக்திகளில் நுட்பமான சதிகளில் ஒன்று என்பதை ஒடுக்கப்பட்ட மக்களிடம் அதி வேகமாய் கொண்டு செல்லவேண்டிய தருணத்தில் நிற்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
இதோ மணிப்பூரில் கூட்டமாகக் கூடி, ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் இரண்டு இளம் பெண்களின் ஆடைகளைக் களைந்து, நிர்வானமாக ஊர்வலமாய் அழைத்துச் சென்று கூட்டு வன்புணர்வு செய்யும் மன நிலையைதான் அம்பேத்கர் இப்படி சுட்டி உள்ளார்.
“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால் அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள் நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள்; அவர்கள் துறவியைப் போல் பேசுவார்கள், ஆனால் கசாப்பு கடைக்காரன் போல நடந்துகொள்வார்கள்.” – பாபாசாகேப் அம்பேத்கர்
(நன்றி: BookDay.in)